மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கான முதல் 25 மெகாவாட் விசையாழிகளை (Turbines) பெற்றது ஹேவிண்ட் (HayWind)
ஹேலிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட் (Hayleys Fentons Ltd.) நிறுவனத்தின் காற்றாலை மின் சக்திப் பிரிவான ஹேவிண்ட் ஒன் லிமிடெட் (HayWind One Ltd.), மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் மொத்தமான 50 மெகாவாட் காற்றாலை விசையாழிகளில், முதல் 25 மெகாவாட்டிற்கான விசையாழிகள் திருகோணமலை துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்துள்ளன.
இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதும், கணிசமான அளவு புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை (renewable power) உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மதிப்பிடப்பட்ட 20 வருட ஆயுட்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளுக்கான (fossil fuel) செலவுகளில் சுமார் 100 பில்லியன் ரூபாயை ஒட்டுமொத்தமாக மிச்சப்படுத்தும். இது இலங்கையின் தேசிய எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தூய்மையான மற்றும் குறைந்த செலவிலான மின் உற்பத்தியை நோக்கிய நாட்டின் மாற்றத்திற்கும் துணைபுரியும்.
என்விஷன் எனர்ஜி டெக்னாலஜி லிமிடெட் (Envision Energy Technology Ltd.) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தின் 10 காற்றாலை விசையாழிகளில், 5 விசையாழிகள் இப்போது மன்னார் திட்ட தளத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளன. திருகோணமலையில் இருந்து விசையாழிகளின் பாகங்களை எடுத்துச் செல்லும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விநியோக நடவடிக்கையானது, நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போக்குவரத்துப் பணிகளில் ஒன்றாகும். மிகப் பெரிய அளவிலான விசையாழி இறக்கைகள் (turbine blades), கோபுரப் பகுதிகள் (tower sections) மற்றும் இயந்திரப் பெட்டிகள் (nacelles) ஆகியவை பல மாவட்டங்கள் ஊடாகக் கொண்டு செல்லப்படவுள்ளன. விரிவான பொறியியல் மதிப்பீடுகள் மற்றும் சரியான பாதை திட்டமிடல் ஆகியவற்றின் ஆதரவோடு, கவனமாக ஒருங்கிணைக்கப்பட்ட கனரகப் போக்குவரத்து அமைப்பின் மூலம் இந்தப் பாகங்கள் மன்னார் தளத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
